சவாலான இலக்கை சப்பையா அடித்த இங்கிலாந்து..! பெரிய ஸ்கோர் அடித்தும் பல்பு வாங்கிய பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Aug 30, 2020, 10:50 PM IST
Highlights

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடந்தது. இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 195 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர்  அசாமும் ஃபகர் ஜமானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 8.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 72 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி 36 ரன்கள் அடித்த ஃபகர் ஜமான், அடில் ரஷீத்தின் சுழலில் வீழ்ந்தார். 

அதன்பின்னர், கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்த அணியின் சீனியர் வீரரான முகமது ஹஃபீஸ் மிகச்சிறப்பாக ஆடினார். அதிரடியாக் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் பாபர் அசாம் 44 பந்தில் 56 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த முகமது ஹஃபீஸ், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். வெறும் 36 பந்தில் 69 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். மற்றொரு சீனியர் வீரரான ஷோயப் மாலிக் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனாலும் ஹஃபீஸ், பாபர் அசாம் ஆகியோரின் அதிரடி அரைசதம் மற்றும் ஃபகர் ஜமானின் அதிரடி பேட்டிங்கின் விளைவாக, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 195  ரன்கள் அடித்தது. 

196 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாகவும், இதெல்லாம் எங்களுக்கு எளிதான இலக்குதான் என்பதை பறைசாற்றும் விதமாகவும், ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் பவுலிங்கை அடித்தும் பாக்., பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியும் ஆடினர் இங்கிலாந்து வீரர்கள்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டாம் பாண்ட்டன் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவரில் 66 ரன்களை குவித்தனர். பேர்ஸ்டோ, 24 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். டாம் பாண்ட்டன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் இயன் மோர்கனும் டேவிட் மாலனும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். அதிரடியாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். கேப்டன் மோர்கன் 33 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பின்னர் மொயின் அலி ஒரு ரன்னிலும் சாம் பில்லிங்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், அரைசதம் அடித்த டேவிட் மாலன் 56 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
 

click me!