ENG vs IND: ரூட், பேர்ஸ்டோ அபார சதம்.. 5வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

Published : Jul 05, 2022, 04:40 PM IST
ENG vs IND: ரூட், பேர்ஸ்டோ அபார சதம்.. 5வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில், ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரின் அபார சதங்களால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது.  

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அப்போது 5 டெஸ்ட்  போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்தது.

கொரோனா பரவல் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி, இந்த முறை இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றபோது நடந்தது.

ஒத்திவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக ஆடாததால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்).

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட்,  ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 98 ரன்களுக்கே ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்து காப்பாற்றினர்.

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட், 146 ரன்களை குவித்தார். ஜடேஜா 104 ரன்களை குவித்தார். 6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். கடைசி நேரத்தில் பும்ரா அதிரடியாக ஆடி 16 பந்தில் 31 ரன்களை விளாசினார். ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் பும்ரா 29 ரன்களை அடித்தார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 35 ரன்கள் கிடைக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியும் 83 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியை ரிஷப் பண்ட் சதமடித்து காப்பாற்றியதை போல், இங்கிலாந்து அணியை பேர்ஸ்டோ சதமடித்து காப்பாற்றினார். அபாரமாக பேட்டிங் ஆடிய பேர்ஸ்டோ 106 ரன்களை குவித்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 31 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில், புஜாரா, ரிஷப் பண்ட்டை தவிர மற்றவர்கள் இந்த இன்னிங்ஸிலும் சொதப்பினர். புஜாரா 66 ரன்களும், ரிஷப் பண்ட் 57 ரன்களும் அடித்தனர். விராட் கோலி, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற, 378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 107 ரன்களை குவித்தனர். க்ராவ்லி 46 ரன்களுக்கும், அரைசதம் அடித்த லீஸ் 56 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஆலி போப் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 107 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதனால் இந்திய அணி பெற்ற கொஞ்சநஞ்ச நம்பிக்கையிலும், பேர்ஸ்டோவும் ரூட்டும் இணைந்து  மண்ணை அள்ளிப்போட்டனர். இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். அதன்பின்னர் விக்கெட்டே இழக்காமல் அருமையாக பேட்டிங் ஆடினர். இந்திய பவுலர்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் ஆடிய ரூட் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இருவரும் முறையே அடுத்தடுத்து சதமடித்து 378 ரன்கள் என்ற இலக்கை எட்டி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?