
இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், மொயின் அலி, சாம் கரன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் உட்.
வங்கதேச அணி:
தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, டைஜூல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் சால்ட்(7), டேவிட் மலான்(11), ஜேம்ஸ் வின்ஸ்(5) ஆகியோர் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடக்க வீரர் ஜேசன் ராய் நிலைத்து நின்று அடித்து ஆடினார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பாக பேட்டிங் ஆடினார். ராய் - பட்லர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 109 ரன்களை குவித்தனர்.
அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ஜேசன் ராய் 132 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12வது சதத்தை விளாசிய ஜேசன் ராய், அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட்(16 சதங்கள்) மற்றும் மோர்கன்(13 சதங்கள்) ஆகிய இருவருக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்தார். பட்லர் 76 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் சாம் கரன் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தனர். மொயின் அலி 35 பந்தில் 42 ரன்கள் அடித்தார். சாம் கரன் 19 பந்தில் 33 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 326 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
327 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் மட்டுமே நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடக்க வீரரும் கேப்டனுமான தமிம் இக்பால் 35 ரன்கள் அடித்தார். மஹ்மதுல்லா 32 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்தளவிற்குக்கூட ஆடாமல் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்ததால் அந்த அணி 44.4 ஓவரில் வெறும் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது.