#ENGvsNZ டிம் சௌதியிடம் சரணடைந்த இங்கிலாந்து வீரர்கள்..! ரோரி பர்ன்ஸ் சதமடித்தும் 275 ரன்களுக்கே ஆல் அவுட்

By karthikeyan VFirst Published Jun 5, 2021, 9:34 PM IST
Highlights

ரோரி பர்ன்ஸ் சதமடித்தும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கே சுருண்டது.
 

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கடந்த 2ம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர் கான்வேவின் இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 378 ரன்களை குவித்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நிலையில், 3ம் நாளான நேற்றைய ஆட்டம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் மட்டும் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் மறுமுனையில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கின்றனர். தொடக்க வீரர் சிப்ளி டக் அவுட், ஜாக் க்ராவ்லி 2 ரன்னில் அவுட். அதன்பின்னர் பர்ன்ஸுடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரூட் சிறப்பாக ஆடிய நிலையில், அவரும் 42 ரன்னில் ஆட்டமிழக்க, ஆலி போப்பை 22 ரன்னில் வீழ்த்திய டிம் சௌதி, அவரது அடுத்தடுத்த ஓவர்களில் லாரன்ஸ் மற்றும் பிரேஸி ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி அனுப்ப, 140 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ் மட்டும் களத்தில் நங்கூரம் போட்டு நிலைத்து ஆடி சதமடித்தார். பர்ன்ஸுடன் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின்சன் சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 42 ரன்னில் சௌதியின் பந்தில் ஆட்டமிழக்க, ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட் ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, சதமடித்த பர்ன்ஸ் கடைசி விக்கெட்டாக 132 ரன்னில் ஆட்டமிழக்க, 275 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. நியூசிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி, அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது நியூசிலாந்து அணி.
 

click me!