
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோ. 2004ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய பிராவோ, 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
ட்வைன் பிராவோ டெஸ்ட் கிரிக்கெட்டை விட, வெள்ளைப்பந்து போட்டிகளில் சிறந்து விளங்கினார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக ஜொலித்த பிராவோ, இன்னும் டி20 போட்டிகளில் அசத்திவருகிறார்.
ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் என உலகம் முழுதும் நடக்கும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவரும் பிராவோ, ஐபிஎல்லில் 152 போட்டிகளில் ஆடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; 1537 ரன்கள் அடித்துள்ளார்.
சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற போது முக்கிய பங்காற்றியிருக்கிறார் பிராவோ. இன்னும் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆடிவருகிறார். டெத் ஓவர்களில் நல்ல வேரியேஷனுடன் வீசுவதால், அவரது பவுலிங்கை ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். அவரது சாமர்த்தியமான டெத் ஓவர் பவுலிங்கால் சிஎஸ்கே அணி பல சாத்தியமற்ற போட்டிகளை வென்றிருக்கிறது.
சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் பிராவோ, தன் வாழ்க்கையையே மாற்றிய ஒரு பந்தை நினைவுகூர்ந்துள்ளார். அதுகுறித்து பேசிய ட்வைன் பிராவோ, எனது பவுலிங் வேரியேஷன் தான் எனது டி20 கெரியரில் வெற்றிகரமாக திகழ்வதற்கு காரணம். எனது ஃபேவரைட் என ஒரு பந்தை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது யுவராஜ் சிங்கிற்கு வீசிய பந்துதான். அந்த பந்துதான் என் வாழ்க்கையையே மாற்றியது என்றார் பிராவோ.
2006ல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, 2வது ஒருநாள் போட்டியில் 198 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் யுவராஜ் சிங் களத்தில் இருந்தார். பிராவோ தான் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாச, அப்போதைய இளம் வீரரான பிராவோ, 2 பவுண்டரிகள் வழங்கியதற்கு அடுத்த பந்தை ஸ்லோ யார்க்கராக வீச, அதை சற்றும் எதிர்பார்த்திராத யுவராஜ் சிங், 93 ரன்னில் க்ளீன் போல்டாக, ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. அந்த மேட்ச் வின்னிங் பந்துதான் தனது ஃபேவரைட் மற்றும் தன் வாழ்க்கையையே மாற்றிய பந்து என்று பிராவோ கூறியிருக்கிறார்.