விரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

By karthikeyan VFirst Published Oct 18, 2019, 2:56 PM IST
Highlights

உலக கோப்பை தோல்வியை அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய சுற்றுப்பயணமும் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. இரண்டுமே மிகப்பெரிய தோல்வி.

அந்த அணியில் ஒரே நேரத்தில் டிவில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் ஆகிய அணியின் மூத்த வீரர்கள் இல்லாமல் போனது பெரிய அடி. அதனால் அனுபவமில்லாத இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்களை கொண்ட இந்திய அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா படுதோல்வியை சந்தித்தது. 

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியிலாவது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் முடிந்தவரை கடுமையாக போராடியது. ஆனால் இரண்டாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி தோற்றது. 

இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிதான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி, இரண்டு போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். முதலில் பேட்டிங் பிடிக்க காரணம், டாஸ் வென்றது. ஆக மொத்தத்தில் டாஸ் தோற்றபோதே தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் தோற்றுவிட்டது எனலாம். ஏனெனில் விசாகப்பட்டின மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு பந்து தாறுமாறாக திரும்பியது. அதை நன்கு பயன்படுத்தி கொண்ட இந்திய ஸ்பின்னர்கள், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சுழலில் சரித்துவிட்டனர்.

எனவே இந்திய ஆடுகளங்களை பொறுத்தமட்டில் டாஸ் வெல்வது மிக முக்கியம். ஆசியாவில் கடைசியாக ஆடிய 9 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் டாஸ் தோற்றுள்ளார். எனவே டாஸில் தனது மோசமான ரெக்கார்டால் மிகுந்த வருத்தத்தில் உள்ள கேப்டன் டுப்ளெசிஸ், நாளை தொடங்கவுள்ள கடைசி போட்டியில், தனக்கு பதிலாக வேறு யாராவது ஒரு வீரரை டாஸ் போட அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள டுப்ளெசிஸ், டாஸ் போடுவதற்கு நாளை வேறு யாரையாவது அனுப்ப வேண்டும். ஏனெனில் டாஸில் எனது ரெக்கார்டு படுமோசமாக உள்ளது என்றார் டுப்ளெசிஸ். 

டாஸ் போடுவது கேப்டனின் உரிமை. அப்படியிருந்தும், தொடர் டாஸ் தோல்வியால், தனது உரிமையை விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளார் டுப்ளெசிஸ்.
 

click me!