இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான துருவ் ஜூரெல், கிரிக்கெட் வாங்க அம்மா தனது தங்க சங்கிலியை வித்து கொடுத்தாங்க என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் 22 வயதான துருவ் ஜூரெல் இடம் பெற்றுள்ளார்.
துருவ் ஜூரெல் இந்திய அணிக்காக அண்டர் யு19 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். யு19 இந்திய அணியில் துணை கேப்டனாக இருந்துள்ளார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ரஞ்சி டிராபி, ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் என்று சிறப்பாக விளையாடியுள்ளார்.
ரிங்கு சிங்கின் நண்பருக்கு இந்திய அணியில் இடம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்!
இதன் மூலமாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக இடம் பெற்று விளையாடினார். இதில், 13 போட்டிகளில் விளையாடி 172 ஸ்டிரைக் ரேட்டுடன் 152 ரன்கள் மட்டுமே எடுத்தார். வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் தான் இங்கிலாந்திற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து துருவ் ஜூரெல் கூறியிருப்பதாவது: “நான் ராணுவப் பள்ளியில் படித்தேன், விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர நினைத்தேன். என் அப்பாவுக்குத் தெரிவிக்காமல் பதிவுப் படிவத்தை நிரப்பினேன். கடைசியில் தெரிந்ததும் என்னை திட்டினார். இருந்த போதிலும், அவர் எனக்காக ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார்.
பின்னர், ஒரு முழுமையான கிரிக்கெட் கிட் தேவை என்று நான் குறிப்பிட்டபோது, என் அப்பா ஆறிலிருந்து ஏழாயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டார். நான் விளையாடுவதை விட்டுவிடுவேன் என்று அவர் பரிந்துரைத்தார். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். நான் குளியலறையில் என்னைப் பூட்டிக்கொண்டேன். ஒரு ஆச்சரியமான திருப்பமாக, என் அம்மா எனக்கு கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக தனது தங்கச் சங்கிலியை விற்றார் என்று கூறியுள்ளார்.