
கொழும்புவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் துருவ் ஜுரலின் இரண்டாவது டெஸ்ட் சதம், தேவ்தத் படிக்கல்லின் சதம் மற்றும் ரிஷப் பண்ட்டின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி 500 ரன்களைக் கடந்தது. அதே வேளையில் இலங்கை அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும், இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் ஒரு செம எமோஷனல் விஷயத்தை ஷேர் செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை அடித்த அவர், தனது கையில் உள்ள 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' டாட்டூவுக்கான காரணத்தை விளக்கினார். தனது தந்தை ஒரு ராணுவ வீரர், தாத்தா ஒரு விவசாயி என்பதால், தனது வேர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த டாட்டூவை வரைந்துள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: தோனியின் சாதனையை தூள் தூளாக்கிய 'சிஷ்யன்' ரிஷப் பண்ட்! காயத்துடன் விளையாடி மாஸ் ரெக்கார்ட்!
ஆட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜுரல், இதற்கு முன் இந்தியா 'A' அணிக்காக இலங்கையில் இரண்டு ஃபர்ஸ்ட்-கிளாஸ் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தனக்கு உதவியதாகக் கூறினார். சதம் அடித்ததும், பேட்டை உயர்த்தி, தனது கையில் இருந்த 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' டாட்டூவைக் காட்டி அவர் கொண்டாடினார்.
"நான் ஏற்கனவே இந்தியா 'A' அணியுடன் இங்கு வந்து விளையாடியிருக்கிறேன். அதனால், இங்குள்ள சூழல் எனக்கு நன்றாகவே தெரியும். பயிற்சியாளரும், கேப்டனும் சொன்னது போல, கள நிலவரத்தைப் புரிந்துகொண்டு, பார்ட்னர்ஷிப் அமைத்து பாசிட்டிவாக விளையாட முயற்சித்தேன்" என்று ஜுரல் கூறினார். தனது டாட்டூ குறித்து பேசிய அவர், "அது என் கதை. என் தாத்தா ஒரு விவசாயி, என் அப்பா ஒரு ராணுவ வீரர். அதுதான் என் வேர்கள், நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறக்க விரும்பவில்லை. அதனால் இந்த கொண்டாட்டம் என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் சமர்ப்பணம்," என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
துருவ் சதத்தை கொண்டாடிய சிராஜ்
ஜுரல் சதம் அடித்தபோது, அவருடன் பேட்டிங் செய்துகொண்டிருந்த முகமது சிராஜ், ஜுரலை விட அதிகமாகக் கொண்டாடினார். இதுகுறித்து ஜுரல், "நான் அவரிடம் பேசும்போதெல்லாம், சதம் அடித்தவரை விட அவர்தான் அதிகமாகக் கொண்டாடுவார் என்று தோன்றும். அது அவரிடம் உள்ள ஒரு நல்ல குணம். அவர் சிறப்பாக டிஃபென்ஸ் செய்து ஆடினார்" என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மோசமாக ஆடிய பிறகு, காலே டெஸ்டில் அரைசதமும், இந்த டெஸ்டில் சதமும் அடித்திருந்தாலும், தன்னால் மன அழுத்தமின்றி இருக்க முடியாது என்று ஜுரல் கூறுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி வரவிருப்பதால் இந்த அழுத்தம் தொடரும் என்கிறார்.
இதையும் படிங்க: Jaiswal vs Fernando: இலங்கை வீரருடன் மோதல்! ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் விளையாட தடையா? ஐசிசி ரூல்ஸ் என்ன?
இது எனக்கு பெருமை
"இந்தியாவுக்காக விளையாடும்போது மன அழுத்தம் இல்லாமல் இருக்கவே முடியாது. நாங்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை பெருமையாக நினைக்கிறோம். முதல் 20-25 பந்துகளை சந்திக்கும்போது மனதில் ஒருவித பதற்றம் இருக்கும். இன்று நான் 100 ரன்கள் அடித்திருந்தாலும், நாளை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அந்த உணர்வு அப்படியேதான் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.