எத்தனை பேரு சோலிய நான் முடிச்சு விட்ருக்கேன்.. என்கிட்டயேவா..? ஜீனியஸ் தோனி.. இது உடம்பா ஸ்பிரிங்கா?

By karthikeyan VFirst Published Feb 28, 2019, 4:22 PM IST
Highlights

எந்த பந்தை எப்படி போட வேண்டும் என பவுலர்களை வழிநடத்தும் தோனி, அவருக்கு எதிராக தீட்டப்படும் திட்டங்களை அவரால் எளிதில் கண்டறிந்து அதை முறியடிக்க முடியும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 190 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் அந்த இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது. 

இந்த போட்டியில் தோனி மீண்டும் அதிரடியாக ஆடி நம்பிக்கையளித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்தார் தோனி. அந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் தோனியின் மந்தமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. அதுமட்டுமல்லாமல் சுமார் 8 சிங்கிள்களை ஓடாமல் தவிர்த்தார். அதுவும் அந்த போட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் தான் வெற்றி பெற்றது. அந்த வகையில், ஒருவேளை அந்த சிங்கிள்களை ஓடியிருந்தால், அதுவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

முதல் போட்டியில் விட்டதை இரண்டாவது போட்டியில் பிடித்தார் தோனி. முதல் போட்டியில் மந்தமாக ஆடியதால் கடும் விமர்சனங்களை சந்தித்த தோனி, வழக்கம்போலவே இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். 

நேற்றைய போட்டியில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 40 ரன்களை குவித்தார் தோனி. களமிறங்கியது முதலே அடித்து ஆடினார் தோனி. பெங்களூரு சின்னசாமி மைதானம் தான் தோனி டி20 போட்டிகளில் அதிகமான ஸ்கோர் அடித்திருக்கும் இரண்டாவது மைதானம். பெங்களூரு மைதானத்தில் தோனி சிறப்பாக ஆடுவார் என்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் அபாரமாக ஆடி மீண்டும் அதை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே அபாரமாக ஆடினார். 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் தோனி பேட்டிங் ஆடியபோது ஆடம் ஸாம்பா வீசிய 12வது ஓவரில் ஒரு பந்தை தோனி இறங்கிவந்தார். அதனால் பந்தை விலக்கி வீசினார் ஸாம்பா. அதைப்பிடித்து விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ய முயன்றார். ஆனால் அதற்கு இடமளிக்காத தோனி, காலை அகற்றி கிரீஸை தொட்டார். அப்போது அவரது கால்கள் 2.14 மீட்டர் இடைவெளிக்கு விரிந்தன. தோனியின் உடல் நெகிழ்வுத்தன்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தோனியின் வயதை சுட்டிக்காட்டி அவரை விமர்சிப்பவர்களுக்கு இது பதிலடியாக அமைந்தது. 

அனுபவ விக்கெட் கீப்பரான தோனி, எந்த பந்தை எப்படி போட வேண்டும் என்று பவுலர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருப்பார். எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்த எந்தவித திட்டமும் இல்லாமல் பவுலர்கள் நிராயுதபாணியாக இருக்கும்போது, அவர்களுக்கு சரியான ஆலோசனையை வழங்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவது தோனி வழக்கமாக செய்துவரும் காரியம். 

எந்த பந்தை எப்படி போட வேண்டும் என பவுலர்களை வழிநடத்தும் தோனி, அவருக்கு எதிராக தீட்டப்படும் திட்டங்களை அவரால் எளிதில் கண்டறிந்து அதை முறியடிக்க முடியும். ஸ்பின் பவுலிங்கில் பேட்ஸ்மேன் இறங்கிவரும் போது பந்தை ஆஃப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரமாக போடுமாறு பவுலருக்கு சிக்னலை கொடுத்து ஸ்டம்பிங் செய்யும் வித்தையை கற்றுக்கொடுத்ததே தோனிதான். அதனால் அதுபோன்ற திட்டங்கள் தோனியிடம் எடுபடாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் இஷ் சோதியின் இதுபோன்ற திட்டத்தை தோனி முறியடித்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!