#IPL2021 டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு செம குட் நியூஸ்..! அவருக்கு கொரோனா இல்லை; பாசிட்டிவ்னு வந்தது தவறு

By karthikeyan VFirst Published Apr 16, 2021, 4:45 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணி வீரர் அன்ரிக் நோர்க்யாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது தவறு; அதன்பின்னர் செய்யப்பட்ட 3 பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு ஐபிஎல் 14வது சீசன் நடத்தப்பட்டுவருகிறது.

ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள், அணி நிர்வாகத்தினர் உட்பட ஐபிஎல் தொடர்புடைய அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.

கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா, ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் ஐபிஎல்லுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சரியாக ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக கொரோனாவிலிருந்து மீண்டு ஐபிஎல்லில் ஆடிவருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 14ம் தேதி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டெல்லி கேபிடள்ஸ் அணி வீரர் அன்ரிக் நோர்க்யாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரிவிக்கப்பட்டது. நோர்க்யா, ரபாடா, டி காக் ஆகிய தென்னாப்பிரிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடிவிட்டு ஐபிஎல்லுக்காக இந்தியா வந்தனர்.

கொரோனா நெறிமுறைப்படி ஒரு வாரம் குவாரண்டினில் இருந்தனர். குவாரண்டின் முடியப்போன நிலையில், நோர்க்யாவிற்கு மட்டும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது. டி காக் மும்பை அணியுடனும், ரபாடா டெல்லி அணியுடனும் இணைந்து தங்கள் அணிக்காக ஒரு போட்டியில் ஆடிவிட்ட நிலையில், நோர்க்யா மட்டும் தனிமையில் இருந்தார்.

நோர்க்யாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட 3 பரிசோதனைகளிலுமே அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. எனவே முன்பு பாசிட்டிவ் என்று வந்த முடிவு தவறானது என்றும், நோர்க்யாவிற்கு கொரோனா இல்லை என்றும் அவர் டெல்லி அணியுடன் இணைந்துவிட்டார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் ஆடாத நிலையில், நோர்க்யாவும் ஆடாமல் இருந்தது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. இந்நிலையில், நோர்க்யா டெல்லி அணியில் ஆடவிருப்பது அந்த அணிக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. ரபாடா - நோர்க்யா ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி தான் கடந்த சீசனில் டெல்லி அணி ஃபைனலுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!