சர்வதேச கிரிக்கெட்டில் தீபக் ஹூடா ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன்மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார் தீபக் ஹூடா.
உள்நாட்டு போட்டிகள், ஐபிஎல் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, அதன்பலனாக இந்திய அணியிலும் இடத்தை பிடித்தார்.
இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் வெற்றிகளில் பங்களிப்பு செய்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டிலும், இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார் தீபக் ஹூடா.
இதையும் படிங்க - ZIM vs IND: ஆடாத வீரர்களுக்கு கடைசி ODI-யில் வாய்ப்பு! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச ஆடும் லெவன்
இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் 140 ரன்களும், 9 டி20 போட்டிகளில் ஆடி 274 ரன்களும் அடித்துள்ளார். இவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இந்திய அணியின் அதிர்ஷ்ட வீரராக திகழ்ந்துவருகிறார் தீபக் ஹூடா.
தீபக் ஹூடா இந்தியாவிற்காக ஆடிய 16 போட்டிகளிலும் இந்திய அணி ஜெயித்துள்ளது. இதன்மூலம், ஒரு வீரர் ஆடியதில் தொடர்ச்சியாக அந்த அணி வெற்றி பெற்றதில் அதிகமான தொடர் வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை தீபக் ஹூடா படைத்துள்ளார்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்
இதற்கு முன் ரோமானிய வீரர் சாத்விக் நடிகோட்லா அந்த அணியின் 15 தொடர் வெற்றிகளில் பங்களிப்பு செய்திருந்தார். அதுதான் சாதனையாக இருந்தது. அதை முறியடித்து தீபக் ஹூடா வரலாற்று சாதனை படைத்துள்ளார். இனிமேல் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடிப்பது கடினம். தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 13 வெற்றிகளில் பங்காற்றியிருக்கிறார்.