டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீபக் சாஹர்

By karthikeyan VFirst Published Nov 11, 2019, 10:02 AM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான கடைசி டி20 போட்டியில், அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தீபக் சாஹர், பல சாதனைகளை படைத்துள்ளார்.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால், 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. 

175 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் அதிரடியாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினார். 12 ரன்களுக்கே வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் நைமுடன் ஜோடி சேர்ந்த முகமது மிதுன், அதிரடியாக ஆடாவிட்டாலும், நைமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் இருந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். முகமது மிதுன் ஒருபுறம் நிற்க, மறுமுனையில் நைம் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது. 

நைம்-மிதுன் ஜோடி ஆடியபோது இந்திய அணி தோல்வியின் பாதையில் பயணித்தது. இந்த ஜோடியை பிரிக்காவிட்டால் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும் என்ற நிலையில், முகமது மிதுனை 27 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் தீபக் சாஹர். அதன்பின்னர் ஷிவம் துபே தன் பங்கிற்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, அதற்கடுத்து தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தார் தீபக் சாஹர். 

தீபக் சாஹர் ஒவ்வொரு முறை பந்தை பெறும்போதும், அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து கொண்டேயிருந்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் போட்ட தீபக் சாஹர், கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளில் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் போட்டார். 3.2 ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தீபக் சாஹர்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹரின் இந்த பவுலிங்தான் பெஸ்ட் பவுலிங். இதற்கு முன்னர் அஜந்தா மெண்டிஸ் 8 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுதான் பெஸ்ட் பவுலிங்காக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் தீபக் சாஹர். 

click me!