உலக கோப்பை ஃபைனலை போல சீட் நுனியில் உட்காரவைத்த மற்றுமொரு பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Nov 11, 2019, 8:13 AM IST
Highlights

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி டை ஆனதையடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3-2 என தொடரை வென்றது. 
 

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 2 போட்டியில் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டி மழை காரணமாக 9 ஓவர்கள் குறைக்கப்பட்டு 11 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் கோலின் முன்ரோவின் அதிரடியான பேட்டிங்கால், 11 ஓவரில் 146 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய கப்டில் வெறும் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். முன்ரோ 21 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். அதன்பின்னர் நான்காம் வரிசையில் இறங்கிய டிம் சேஃபெர்ட் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 39 ரன்களை விளாசினார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 146 ரன்களை குவித்து 147 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் 7 ரன்களிலும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதற்கு முந்தைய போட்டிகளில் சொதப்பிய பேர்ஸ்டோ, அந்த தவறை இந்த போட்டியில் செய்யவில்லை. அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய பேர்ஸ்டோ, வெறும் 18 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். 2 பவுண்டரிகளை மட்டுமே அடித்த பேர்ஸ்டோ 5 சிக்ஸர்களை விளாசினார். 

மோர்கன், சாம் கரன் ஆகியோரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், குறைந்த பந்துகளில் அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டு சென்றனர். மோர்கன் 7 பந்தில் 17 ரன்கள் அடிக்க, சாம் கரன் 11 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 

பில்லிங்ஸும் டாம் கரனும் களத்தில் இருந்தனர். 11வது(கடைசி) ஓவரின் முதல் பந்தில் பில்லிங்ஸ் 2 ரன்கள் அடித்துவிட்டு இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் டாம் கரன் அவுட்டாக, ஜேம்ஸ் நீஷமின் அடுத்த 3 பந்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. டாம் கரனின் விக்கெட்டுக்கு பின்னர் களத்திற்கு வந்த ஜோர்டான், ஜேம்ஸ் நீஷம் வீசிய 4வது பந்தில் சிக்ஸர் விளாசி இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். அடுத்த பந்தில் 2 ரன்கள் அடித்த ஜோர்டான், கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க, போட்டி டை ஆனது. 

இந்த இரு அணிகளும் மோதிய உலக கோப்பை இறுதி போட்டி இதேபோலத்தான் டை ஆனது. அதேபோலவே தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான இந்த போட்டியும் டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 

நியூசிலாந்து அணியின் சார்பில் கேப்டன் டிம் சௌதி சூப்பர் ஓவரை வீசினார். இங்கிலாந்து அணியின் சார்பில் மோர்கனும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். சூப்பர் ஓவரில் இருவருமே தலா ஒரு சிக்ஸரை விளாசினர். மேலும் 3 சிங்கிள்களும், ஒரு 2 ரன்னும் எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் மொத்தமாக 17 ரன்களை விளாசியது இங்கிலாந்து. 18 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டையும் இழந்து வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. 

இதையடுத்து 3-2 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பேர்ஸ்டோவும் தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னெரும் தேர்வு செய்யப்பட்டனர். 
 

click me!