இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் அவங்க 2 பேரையும் எடுத்துருக்கணும்..! முன்னாள் தேர்வாளர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 11, 2021, 5:06 PM IST
Highlights

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய இருவரையும் எடுத்திருக்க வேண்டுமென முன்னாள் தேர்வாளர் தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூலை 13 முதல் 25 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதால், அடுத்தகட்ட இந்திய அணி இலங்கைக்கு செல்லவுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகிய முக்கியமான வீரர்கள் இங்கிலாந்து தொடரில் ஆடுவதால், இளம் வீரர்களுக்கு இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சகாரியா ஆகிய வீரர்களுக்கு அணியில் கிடைத்துள்ளது. தவான் தலைமையில் 20 வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது. நெட் பவுலர்களாக இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 பேரும் எடுக்கப்பட்டனர்.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.

இந்த அணியில் உனாத்கத் மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய இருவரையும் சேர்த்திருக்க வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா, பெருந்தொற்று நேரத்தில் அணி தேர்வு மிக எளிதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ள நிலையில், இன்னும் 2 வீரர்களை கூடுதலாக அணியில் எடுத்திருக்கலாம். 20-25 வீரர்களை அணியிலும், 5 நெட் பவுலர்களையும் எடுக்கலாம். 

ஜெய்தேவ் உனாத்கத்  மற்றும் ராகுல் டெவாட்டியா மாதிரியான வீரர்களை அணியில் எடுத்திருக்கலாம். அணி தேர்வு குறித்து நான் நிறைய பேச விரும்பவில்லை. 20 வீரர்களைத்தான் எடுத்திருக்கிறார்கள். அதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. ஜெய்தேவ் உனாத்கத் கிரிக்கெட் மீது பேரார்வமுள்ள கடின உழைப்பாளி. அதனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரையும் டெவாட்டியாவையும் எடுத்திருக்கலாம் என்று தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!