வரலாற்றில் இன்று.. சேவாக்கிடம் சிக்கி சீரழிந்த வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Dec 8, 2019, 4:57 PM IST
Highlights

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டை சதம் அடிக்கப்பட்ட நாள் இன்று(டிசம்பர் 8).
 

கிரிக்கெட்டில் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்ட மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தான், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தையும் அடித்தார். அதன்பின்னர் அவரது ஓபனிங் பார்ட்னரும் அதிரடி பேட்ஸ்மேனுமான சேவாக் தான் இரண்டாவது இரட்டை சதத்தை அடித்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களை அடித்த சேவாக், ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தையும் அடிக்க தவறவில்லை. 2011ம் ஆண்டு இதே நாளில் தான் அந்த சாதனையை நிகழ்த்தினார். 

சர்வதேச ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் 264, மார்டின் கப்டிலின் 237 ஆகியவற்றிற்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர், சேவாக் அடித்த 219 ரன்கள் தான். 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், வழக்கம்போலவே அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

ஆனால் இந்த முறை அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இன்னிங்ஸ் முழுவதும் தனது அதிரடியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கிவிட்டார். சேவாக் சில ஓவர்கள் அதிரடியாக ஆடினாலே எதிரணியின் நிலை மோசமாகிவிடும். அப்படியிருக்கையில், 47 ஓவர்கள் வரை களத்தில் நின்றால் என்ன ஆகும்? கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாத அந்த கொடூர அவஸ்தைக்கு ஆளானது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அரைசதம், 100, 150 என நிறுத்தாமல் ஸ்கோர் செய்துகொண்டிருந்த சேவாக், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டை சதத்தையும் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார். 149 பந்தில் 25 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 219 ரன்களை குவித்தார் சேவாக். சேவாக் தனது இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்த நாள் தான் இன்று. இந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 418 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸை 265 ரன்களுக்கெல்லாம் சுருட்டி 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

சேவாக் அடித்த இந்த இரட்டை சதத்திற்கு பின்னர்தான், ரோஹித் சர்மா 3 இரட்டை சதங்களையும் மார்டின் கப்டில், கிறிஸ் கெய்ல் மற்றும் ஃபகார் ஜமான் ஆகியோர் தலா ஒரு இரட்டை சதமும் அடித்தனர். 
 

click me!