ஆர்ச்சரோ மார்க் உட்டோ.. எவன் வந்தால் எனக்கென்ன..? என் அடியை மட்டும் பாருங்க.. கெத்து காட்டிய டி காக்

By karthikeyan VFirst Published Jan 2, 2020, 5:19 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், கெத்தாக பேசியுள்ளார் குயிண்டன் டி காக். 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் கூட, அவரது பவுலிங்கை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். அவரது பவுலிங்கில் பவுண்டரியும் சிக்ஸருமாக பறந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 17 ஓவரில் 102 ரன்களை விட்டுக்கொடுத்தார் ஆர்ச்சர். குறிப்பாக அவரது பவுலிங்கை குயிண்டன் டி காக் பொளந்துகட்டிவிட்டார். 

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், நாளை(ஜனவரி 3ம் தேதி) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அந்த போட்டியில் ஆர்ச்சர் ஆடுவாரா அல்லது மார்க் உட் ஆடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள டி காக், ஆர்ச்சர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் சரி.. ஒருவேளை அவருக்கு பதிலாக மார்க் உட் ஆடினாலும் சரி.. எனது அணுகுமுறையில் எந்த மாற்றமும் இருக்காது. மார்க் உட்டும் 145 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர் தான். ஆனால் நான் எனது அணுகுமுறையை மாற்றமாட்டேன். அணியின் சூழல் சிறப்பாக உள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன், ஒரு அணியாக சற்று தளர்ந்திருந்ததுபோல் தெரிந்தது. ஆனால் இந்த வெற்றிக்கு பின்னர், வீரர்கள் அதீத கவனமுடன் திகழ்கின்றனர். அணியின் சூழல் நன்றாக இருக்கிறது என்று டி காக் உற்சாகமாக பேசினார். 

click me!