எனக்கு அப்பவே தெரியும்.. வில்லியம்சனை வியந்து புகழ்ந்த விராட்

By karthikeyan VFirst Published Jan 2, 2020, 4:08 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்கள் நால்வருமே அண்டர் 19 கிரிக்கெட்டிலும் ஒன்றாக ஆடியவர்கள். 
 

விராட் கோலி தலைமையிலான அண்டர் 19 இந்திய அணி 2008ல் உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பை அரையிறுதியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்ற கோலி தலைமையிலான அண்டர் 19 இந்திய அணி, உலக கோப்பையை வென்றது. 

11 ஆண்டுகள் கழித்து 2019 உலக கோப்பையில் வரலாறு திரும்பியது. அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் மோதிய அதே கேப்டன்கள் இருவரும் படிப்படியாக வளர்ந்து சமகாலத்தின் சிறந்த வீரர்களாக உருவெடுத்துள்ளதோடு, சீனியர் அணிகளின் கேப்டன்களாகவும் இருக்கின்றனர். 2019 உலக கோப்பை அரையிறுதியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அண்டர் 19 உலக கோப்பையில் வாங்கிய அடிக்கு, இந்த உலக கோப்பையில் பதிலடி கொடுத்தார் வில்லியம்சன். 

அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்று, கிட்டத்தட்ட கோப்பையை வென்றது வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி. 

இந்நிலையில், 2008லேயே வில்லியம்சனின் பேட்டிங்கை வியந்து பார்த்த விராட் கோலி, இப்போது அதை தெரிவித்துள்ளார். ஒரே பேட்ச்சில் ஆடிய வீரர்கள், இப்போதும் கோலோச்சுவது குறித்து பெருமை தெரிவித்தார் கோலி. இதுகுறித்து பேசிய கோலி, கேன் வில்லியம்சனுக்கு எதிராக 2008ல் ஆடியது இன்னும் நினைவிருக்கிறது. அவர் எப்போதுமே அணிக்காக சிறப்பாக ஆடக்கூடியவர். அவரது பேட்டிங் திறமையும் ஆட்டத்திறனும் மற்றவர்களிடமிருந்து அப்போதே வேறுபட்டிருந்தது. அப்போதே அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அபாரமாக ஆடக்கூடியவர். ஒரே பேட்ச்சில் ஆடிய நான், வில்லியம்சன், ஸ்மித் ஆகியோர் அவரவர் நாட்டுக்காக இன்னும் சிறப்பான பங்களிப்பை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அண்டர் 19 உலக கோப்பை என் கிரிக்கெட் கெரியரில் மிக முக்கியமானது. இப்போது சிறந்த வீரர்களாக நாங்கள் திகழ்வதற்கு அந்த உலக கோப்பை நல்ல அடித்தளமாக அமைந்தது என்று கோலி தெரிவித்துள்ளார். 
 

click me!