இங்கிலாந்துக்கு எதிராக கண்மூடித்தனமா அடித்த டி காக்.. டிவில்லியர்ஸின் சாதனையை தகர்த்து தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Feb 15, 2020, 10:13 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 22 பந்தில் 65 ரன்களை குவித்த குயிண்டன் டி காக், அபார சாதனை படைத்துள்ளார். 
 

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் அதேமாதிரி த்ரில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை பழிதீர்த்ததோடு, 1-1 என தொடரை சமன் செய்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, மொயின் அலியின் காட்டடியால் 204 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் 40 ரன்கள், பேர்ஸ்டோ 17 பந்தில் 30 ரன்கள் மற்றும் ஸ்டோக்ஸ் 30 பந்தில் 47 ரன்கள் என்ற நன்றாகத்தான் ஆடினார்கள். ஆனால் ஆட்டத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டு திருப்புமுனையாக அமைந்தது மொயின் அலியின் பேட்டிங்தான். வெறும் பத்தே பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களை விளாசி அணியின் ஸ்கோரை படுவேகமாக உயர்த்திவிட்டு தனது பதினோறாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 204 ரன்களை குவித்தது. 

205 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனும் தொடக்க வீரருமான டி காக், அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய டி காக், சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 17 பந்தில் அரைசதம் கடந்த டி காக், 22 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 92 ரன்கள். அவர் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால், மற்ற வீரர்கள் பெரியளவில் அடித்து ஆடவில்லையென்றாலும் கூட போட்டி கடைசி வரை சென்றது. 

ஆனால் வெற்றிக்கு அருகில் நெருங்கிய தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸில் கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் டாம் கரன். அதனால் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. 

Also Read - 2வது டி20: கடுமையாக போராடிய தென்னாப்பிரிக்கா.. கடைசி ஓவரில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

இந்த போட்டியில் 17 பந்தில் அரைசதம் அடித்த டி காக், டி20 கிரிக்கெட்டில் விரைவில் அரைசதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் டிவில்லியர்ஸ் கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 21 பந்தில் அடித்த அரைசதம் தான், சாதனையாக இருந்தது. டி காக்கும் அதே 21 பந்தில் ஏற்கனவே அரைசதம் அடித்திருக்கிறார். இந்நிலையில், தற்போது டிவில்லியர்ஸ் மற்றும் தனது சாதனையை தானே தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார். 

click me!