டி20 உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 152 ரன்கள் அடித்து, 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடந்துவரும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் தான் இந்த போட்டியில் களமிறங்கின.
undefined
நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 4 ரன்னுக்கு முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை பெற்ற டெவான் கான்வே, பவர்ப்ளேயின் கடைசி பந்தில் 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, க்ளென் ஃபிலிப்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
49 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்த நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சனும் டேரைல் மிட்செலும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4வது விக்கெட்டுக்கு 68 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதத்தை நெருங்கிய வில்லியம்சன், நன்றாக செட்டில் ஆகிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த டேரைல் மிட்செல், 35 பந்தில் 53 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணி 20 ஓவரில் 152 ரன்கள் அடிக்க உதவினார்.
பாகிஸ்தான் அணி 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிவருகிறது. சிட்னி ஆடுகளம் மெதுவாக இருந்தது. நியூசிலாந்து, டிரெண்ட் போல்ட், டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி என சிறப்பான பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால் கண்டிப்பாகவே 153 ரன்கள் என்பது பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு.