டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் நியூசுலாந்தும் மோதும்; நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று ஏபி டிவில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.
க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. சூப்பர் 12 சுற்றில் அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா. அதனால் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
undefined
அரையிறுதியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் இன்று சிட்னியில் ஆடிவருகின்றன. நாளை அடிலெய்டில் நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், எந்த அணிகள் ஃபைனலுக்கு மோதும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஃபைனலில் மோதும். நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணி குறித்து பேசிய டிவில்லியர்ஸ், இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடிவருகின்றனர். சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் உள்ளார். விராட் கோலியும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் சர்மா இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால் அணிக்கு தேவைப்படும்போது முக்கியமான கட்டத்தில் ரோஹித் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார். அருமையான மற்றும் மிகத்திறமையான வீரர் ரோஹித். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி இந்தியாவிற்கு பெரிய டெஸ்ட்டாக இருக்கும். அரையிறுதியில் இந்தியா ஜெயித்து ஃபைனலுக்கு சென்றால் கண்டிப்பாக இந்திய அணி கோப்பையை வென்றுவிடும் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.