கனேரியா பற்றவைத்த அடுத்த நெருப்பு.. பற்றி எரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

By karthikeyan VFirst Published Dec 30, 2019, 12:10 PM IST
Highlights

தான் ஒரு இந்து என்பதால், தான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் சில பாகிஸ்தான் வீரர்கள் தன் மீது பாரபட்சம் காட்டியதாகவும் தன்னுடன் பேசக்கூட மறுத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பிய டேனிஷ் கனேரியா, தற்போது அடுத்த அணுகுண்டை போட்டுள்ளார். 
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்கு அடுத்து ஆடிய இந்து மதத்தை சேர்ந்த வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணியில் 2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2012ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்கூறி, கனேரியாவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. 

அதன்பின்னர் கனேரியா இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார். இந்நிலையில், கனேரியா ஆடிய காலத்தில், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை சில பாகிஸ்தான் வீரர்கள் ஒதுக்கிவைத்ததாகவும் அவருடன் அமர்ந்து சாப்பிடக்கூட மறுத்ததாகவும் அக்தர் கூறியிருந்தார். 

இதையடுத்து, அக்தர் கூறியது உண்மைதான் எனவும், தான் ஒரு இந்து என்பதற்காக தன்னிடம் பாரபட்சம் காட்டி தன்னை ஒதுக்கிய வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்த கனேரியா, அக்தருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். கனேரியாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தன்னுடைய கேப்டன்சியில் ஆடிய கனேரியா மீது இப்படியான மதரீதியான பாகுபாடு நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்றும் கிரிக்கெட்டில் மதம் கலக்கவில்லை என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருந்தார். 

இப்படியாக கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பை கிளப்பியிருந்த கனேரியா, தற்போது தன் மீதான ஸ்பாட் ஃபிக்ஸிங் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து யூடியூபில் பேசியுள்ள கனேரியா, நான் எப்போதுமே தவறான விதத்திலேயே காட்டப்படுகிறேன். உண்மையை பேசுவதற்கான வாய்ப்பு இருந்தும் கூட, பலர் உண்மையை பேசுவதில்லை. நடந்த விஷயங்களை திரித்தே கூறுகின்றனர். நான் இன்று உண்மையை கூறியே ஆக வேண்டும். என்னுடைய ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில், ஸ்பாட் ஃபிக்ஸிங் நபரிடம் என்னை அறிமுகப்படுத்தியது யார்? என்பது அனைவருக்குமே தெரியும். 

ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் அணி நிர்வாகத்தினருக்கும் அந்த நபரை(ஸ்பாட் ஃபிக்ஸர்) தெரியும். அவர் அடிக்கடி அலுவல் ரீதியாகவே பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே பல முறை அழைத்துள்ளது. அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவரை என்னிடம் அறிமுகப்படுத்தும்போது கூட, உனது மதத்துக்காரர் என்றுதான் அறிமுகமே செய்துவைத்தார்கள். அப்படியிருக்கையில், இதையெல்லாம் ஏன் யாரும் பேசுவதில்லை? உண்மையை பேச ஏன் மறுக்கிறார்கள்? என்னுடைய முழு கெரியரையும் மிகவும் நேர்மையான முறையில் ஆடியிருக்கிறேன் என்று கனேரியா தன்னிலை விளக்கமளித்துள்ளார். 

ஸ்பாட் ஃபிக்ஸரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கே தெரியும் என்றும் வாரியமே அவரை அழைத்ததாகவும் பற்றவைத்துள்ளார் கனேரியா.
 

click me!