இங்கிலாந்தை வீழ்த்தி செம கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா.. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக செய்த சாதனை

By karthikeyan VFirst Published Dec 30, 2019, 10:09 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது.
 

தென்னாப்பிரிக்க அணி, டிவில்லியர்ஸ், ஹாஷிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன் மற்றும் மோர்னே மோர்கல் ஆகிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஓராண்டுக்குள்ளாக வரிசையாக ஓய்வு பெற்றதால், அவர்களது இடங்களை உடனடியாக நிரப்ப முடியாமல் தொடர் தோல்விகளை தழுவிவந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. அந்தவகையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கடந்த 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்கியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, குயிண்டன் டி காக்கின் பொறுப்பான பேட்டிங்கால்(95 ரன்கள்) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. குயிண்டன் டி காக்கை தவிர மற்ற வீரர்கள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. வேறு யாருமே அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால் ஹம்ஸா, டுப்ளெசிஸ், பிரிட்டோரியஸ், பிளாண்டர் ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 181 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்கள் அடித்தது. 

மொத்தமாக 375 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 376 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 376 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்களுக்கு மேல் குவித்தது. சிப்ளி 29 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ரோரி பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடினர். 

நன்றாக ஆடி அரைசதம் அடித்து, சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த ரோரி பர்ன்ஸ், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். நல்ல ஸ்டார்ட் கிடைத்த டென்லி மற்றும் ரூட் ஆகிய இருவருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் முறையே 31 மற்றும் 48 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 4 வீரர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே ஏமாற்றமளித்தனர். பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கரன் ஆகியோர் சோபிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் புள்ளி கணக்கை தொடங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு 30 புள்ளிகளை பெற்ற தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 30 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.

தொடர் தோல்விகளை சந்தித்துவந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, இங்கிலாந்து தொடருக்கு முன்பாக புதிய பயிற்சியாளர்களும் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநராக க்ரேம் ஸ்மித்தும், தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சரும் பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலிஸும் நியமிக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களான இவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்ட பிறகு, முதல் போட்டியிலேயே தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் முதல் முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 

click me!