ரஹானே தடவு தடவுனு தடவுறாரு.. ஆனாலும் அந்த 2 பசங்கள்ல ஒருத்தர ஏன் டீம்ல எடுக்கலைனு புரியல.! கனேரியா செம கடுப்பு

By karthikeyan VFirst Published Sep 3, 2021, 9:40 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் அஜிங்க்யா ரஹானேவை அணியில் வைத்துக்கொண்டு, சூர்யகுமார் யாதவ் - ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அணியில் இடம் கொடுக்காதது ஏன் என புரியவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித்(11), ராகுல்(17), புஜாரா(4), ஜடேஜா(10), ரஹானே(14) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஷர்துல் தாகூரின் அதிரடி அரைசதத்தால்(36 பந்தில் 57 ரன்கள்) இந்திய அணி 191 ரன்களை எட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கே சுருண்டது. இந்த போட்டியில் ரஹானேவின் 5ம் பேட்டிங் வரிசையில் ஜடேஜா இறக்கிவிடப்பட்டார்.

இந்த தொடர் முழுவதுமாகவே இந்திய அணியின் துணை கேப்டனும் சீனியர் வீரருமான அஜிங்க்யா ரஹானே ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார். லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் மட்டும் ஒரு அரைசதம்(61) அடித்தார். அதைத்தவிர மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலுமே சொதப்பினார். இந்த தொடரில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் சேர்த்தே மொத்தமாக வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி 18.17 ஆகும்.

ரஹானே தொடர்ந்து திணறிவருவதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆடவைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஹனுமா விஹாரி, மயன்க் அகர்வால் ஆகிய வீரர்களும் பென்ச்சில் உள்ளன. ஆனாலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் சிதைந்துவிட்டது. ரஹானே இந்த தொடர் முழுவதுமாக சொதப்பியிருக்கிறார். அவரை பற்றி இந்திய அணி யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரஹானே மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் மோசமாக உள்ளது. அதுகுறித்து இந்திய அணி சிந்திக்க வேண்டும்.

சூர்யகுமார் யாதவ் - ஹனுமா விஹாரி ஆகியோருக்கு ஆடும் லெவனில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று புரியவில்லை. சூர்யகுமார் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் அணிக்கு தேவை என்றுதான், இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் அனைத்து கண்டிஷனிலும் ஸ்கோர் செய்யக்கூடிய பேட்ஸ்மேனாக தெரிகிறார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!