
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் டேல் ஸ்டெய்ன். இந்த தலைமுறை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன். வாசிம் அக்ரமை போல 150 கிமீ மேலான வேகத்துடனும் ஸ்விங்கும் செய்து வீசக்கூடியவர் டேல் ஸ்டெய்ன். 2004ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க அணியில் ஆடும் டேல் ஸ்டெய்ன், 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகளையும் 125 ஒருநாள் போட்டிகளில் ஆடி 196 விக்கெட்டுகளையும் 47 டி20 போட்டிகளில் ஆடி 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தரமான ஃபாஸ்ட் பவுலரான டேல் ஸ்டெய்ன், சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக மதிப்பிடப்பட்ட நிலையில், இவர்களுடன் பாகிஸ்தானுடன் பாபர் அசாமும் இப்போது இணைந்துள்ளார். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற நால்வரும் 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகின்றனர்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிறந்து விளங்கும் 2-3 வீரர்களுடனான ஒப்பீடு மற்றும் தலைமுறையின் சிறந்த கிரிக்கெட்டர் யார் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்திருக்கிறது.
அந்தவகையில், சமகாலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்று டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் டுவிட்டரில், சமகாலத்தின் சிறந்த வீரர் யார் என்று கேட்டார். அதற்கு பாபர் அசாமாக இருக்கலாம் என்று டேல் ஸ்டெய்ன் பதிலளித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவந்த விராட் கோலியின் அந்த பணியை பாபர் அசாம் கையில் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார் பாபர் அசாம்.