ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம்! தீர்வு சொல்லும் ஆம்ப்ரூஸ்

By karthikeyan VFirst Published Jul 1, 2021, 2:39 PM IST
Highlights

ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விகளுக்கு என்ன காரணம் என்பதை கூறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரூஸ், அதற்கான தீர்வையும் கூறியுள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து, ஐசிசி தரவரிசையிலும் டாப் 3 ரேங்கிற்குள் இருக்கிறது. ஆனால் ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டி ஆகிய முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை தழுவுவது தொடர் கதையாகிவருகிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக ஆடி ஃபைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, ஃபைனலில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. அதற்கடுத்து, 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது. அதைத்தொடர்ந்து தற்போது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் அபாரமாக ஆடிய இந்திய அணி, ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இப்படியாக ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணி தோல்வியை தழுவிவரும் நிலையில், அதற்கான காரணத்தை சுட்டிக்காட்டியதுடன், தீர்வையும் கூறியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரூஸ்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்ட்லி ஆம்ப்ரூஸ், இந்திய அணி முக்கியமான போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிவருகிறது. அரையிறுதி, இறுதிப்போட்டி ஆகிய பெரிய போட்டிகள் என்று வரும்போது, அதற்காக பிரத்யேகமாக தயாராக வேண்டிய அவசியமில்லை. அதுவரை எந்த மாதிரியான கேம் பிளான் மற்றும் ஸ்டைலில் ஆடினார்களோ, எந்த மாதிரி ஆடி வெற்றிகளை பெற்றார்களோ அப்படியே ஆடலாம். எந்த மாதிரியான ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறதோ அப்படி ஆடினாலே போதும். பெரிய போட்டிகளுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் தயாரிப்பும் தேவையில்லை என்று ஆம்ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!