
ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு தகுதிபெறாமல் சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதற்கு, சுரேஷ் ரெய்னா கடந்த சீசனில் ஆடாததே முக்கிய காரணமாக அமைந்தது.
சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் கடந்த சீசனில் ரெய்னா ஆடவில்லை. இதையடுத்து அவர் சிஎஸ்கே அணியிலிருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியானாலும், ரெய்னா தொடர்ந்து சிஎஸ்கே அணியிலேயே இருக்கிறார்.
வரும் 14வது சீசனுக்கான தயாரிப்பில் கடந்த 9ம் தேதியிலிருந்தே கேப்டன் தோனி உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாமிற்கு வர தொடங்கிவிட்டனர். தோனி, ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் உள்ளிட்ட சில வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சிஎஸ்கே அணி வெளியிட்டுவந்தது.
ஆனால் சுரேஷ் ரெய்னா மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், சென்னை வந்துவிட்ட சுரேஷ் ரெய்னா, களத்தில் இறங்கி பயிற்சியை தொடங்கிவிட்டார். ரெய்னா, களத்தில் பந்துகளை பறக்கவிடும் வீடியோவை சிஎஸ்கே அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
ரெய்னா சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் கலந்துவிட்டது ரசிகர்களுக்கு குட் நியூஸ் என்றால், பெரிய ஷாட்டுகளை பறக்கவிடுவது அதைவிட அதிகமான மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.