#CSKvsRCB கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசிய ஜடேஜா; அந்த ஓவரில் மட்டும் 37 ரன்கள்..! விழிபிதுங்கிய கோலி

By karthikeyan VFirst Published Apr 25, 2021, 5:48 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, கடைசி ஓவரில் ஜடேஜாவின் காட்டடியால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

சிஎஸ்கே  மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் டுப்ளெசிஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 9 ஓவரில் 74 ரன்களை குவித்தனர். ருதுராஜ் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களத்திற்கு வந்த ரெய்னா, 24 ரன்னில் வெளியேற, அதே ஓவரிலேயே டுப்ளெசிஸூம் ஆட்டமிழந்தார்.

14வது ஓவரில் ரெய்னாவை வீழ்த்திய ஹர்ஷல் படேல், அதே ஓவரில், அரைசதம் அடித்திருந்த டுப்ளெசிஸையும் வீழ்த்தினார். சரியாக 50 ரன்னில் வெளியேறினார் டுப்ளெசிஸ். ராயுடுவும் 14 ரன்னில் வெளியேற, 19 ஓவரில் சிஎஸ்கே அணி 154 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 

ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசினார் ஜடேஜா. கடைசி ஓவரின் முதல் 2 பந்திலும் சிக்ஸர் அடித்த ஜடேஜா, 3வது பந்திலும் சிக்ஸர் அடித்தார். 3வது பந்து நோ பால் என்பதால் அதற்கும் ஒரு ரன் கிடைத்தது. நோ பாலுக்கு வீசப்பட்ட ஃப்ரீ ஹிட்டிலும் சிக்ஸர் அடித்த ஜடேஜா, 4வது பந்தில் 2 ரன்களும், ஐந்தாவது பந்தில் சிக்ஸரும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடிக்க, கடைசி ஓவரில் சிஎஸ்கேவிற்கு 37 ரன்கள் கிடைத்ததையடுத்து, 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.

19 ஓவர் வரை கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தை கடைசி ஓவரில் ஜடேஜா தட்டிப்பறித்ததையடுத்து, விழிபிதுங்கி நின்ற விராட் கோலியின் ஆர்சிபி, 192 ரன்களை விரட்டிவருகிறது.
 

click me!