
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம் பிடித்தது. இதில், எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பவுலிங் செய்த அணி தான் அதிகளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் காரணமாக டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் ஃபாப் டூபிளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் தடுமாறிய ஃபாப் கடைசியில் 17 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பிறகு சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்த விராட் கோலி 29 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்த நிலையில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரஜத் படிதார் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய மகிபால் லோம்ரார் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஸ்வப்னில் சிங் 9 ரன்களும், கரண் சர்மா 5 ரன்களும் எடுக்கவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் காட்மோர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்கள் சேர்த்தனர். காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பை உணர்ந்து ஆடாமல் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார். அவர் 17 ரன்கள் ஆட்டமிழந்தார்.
துருவ் ஜூரெல் 8 ரன்னிலும், ரியான் பராக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக ஆர்சிபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி வாய்ப்பு வந்தது. அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்கள் எடுத்துக் கொடுக்க கடைசியில் ரோவ்மன் பவல் வந்து அதிரடியாக 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு சென்றது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த அர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இதுவரையில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத ஆர்சிபி இந்த முறை டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 17ஆவது சீசனிலும் டிராபி இல்லை என்ற வேதனையுடன் நடையை கட்டியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. 2022 ஆம் ஆண்டு குவாலிஃபையர் 2ஆவது சுற்றுடன் வெளியேறியது. கடந்த ஆண்டு 6ஆவது இடம் பிடித்த ஆர்சிபி இந்த ஆண்டு பிளே ஆஃப் வந்து எலிமினேட்டர் சுற்றில் விளையாடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.
இந்த நிலையில் தான் ஆர்சிபி தோல்வியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். அதோடு, மீம்ஸ் உருவாக்கி ஆர்சிபியை விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. ஜெயிச்சது பரவாயில்லை, ஆனால், ஓவராக கொண்டாடி, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், கோபமடைந்த சிஎஸ்கே வீரர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் தான் இப்படி என்றால் வீரர்கள் அதற்கும் மேல் ஒருபடி சென்றுள்ளான்ர். பெங்களூரு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இருப்பது போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கேஃபேன்ஸ் என்ற பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்து சிஎஸ்கே ரசிகர்கள் வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.