தனது வாழ்வில் மீம்ஸ் மற்றும் டிரோல்ஸ் பற்றி கவலைப்பட்டதே இல்லை என்றும், ஆனால், இப்போது அது தன்னையும், குடும்பத்தினரையும் கவலைப்பட செய்துள்ளது என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா கூறியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் மருத்துவரான தனஸ்ரீ வர்மா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இன்ஸ்டாவில் தனஸ்ரீ வர்மாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட தனஸ்ரீ கான்சர்ட்டுகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தான் ஜலக் திக்லா ஜா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தனஸ்ரீ வர்மாக்கு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியின் போது, அத்ரிஜா சின்ஹா என்பருடன் இணைந்து தனஸ்ரீ நடனமாடி இருந்தார். நடன இயக்குநர் பிரதிக் உதேகருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகியது. இதன் காரணமாக சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரையும் வைத்து மீம்ஸ் வெளியிட்டனர். இந்த நிலையில் தான் தனஸ்ரீ தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எப்போதும் நான் மீம்ஸ் மற்றும் டிரோல்ஸ் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இந்த முறை அது கவலை அடையச் செய்துள்ளது. சோஷியல் மீடியாவில் மற்றவர்களின் மனதை காயப்படுத்தவோ, புண்படுத்தவோ கூடாது. இது என்னை மட்டுமின்றி ஒவ்வொருவரையும் சோஷியல் மீடியாவிலிருந்து விலகி இருக்க வைக்கிறது. எனது பணியானது சோஷியல் மீடியாவின் அங்கமாக இருக்கிறது. நானும் உங்களது அம்மா, அக்கா, தங்கையைப் போன்று ஒரு பெண் தான். என்னை பற்றி விமர்சிப்பதை இனி வரும் காலங்களில் நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.