Ravichandran Ashwin: தோனிக்காக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்!

Published : Mar 17, 2024, 08:11 AM IST
Ravichandran Ashwin: தோனிக்காக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் – ரவிச்சந்திரன் அஸ்வின்!

சுருக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அஸ்வின், தோனிக்காக எனது வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா வந்த இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடினார். இந்த தொடரில் மட்டுமே அஸ்வின் 25 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், இந்த தொடரின் மூலமாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதோடு, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் 516 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, ஐசிசி முன்னாள் தலைவர் சீனிவாசன், சிஎஸ்கே முதன்மை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் ரவிச்சந்திரனின் மனைவி பிரீத்தி மற்றும் அவரது இரு மகள்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

 

 

இந்த விழாவின் போது அஸ்வினுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, தங்க நாணங்கள் மூலமாக 500 என்று வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசும், செங்கோலும் வழங்கப்பட்டது. இந்த விழாவின் போது பேசிய அஸ்வின் கூறியிருப்பதாவது: 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் நடத்தப்பட்டது. அதில் சிஎஸ்கே அணியில் எனக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லை.

அப்போது காசி விஸ்வநாதனை பார்த்த ஸ்ரீகாந்த், என்னை அணியில் எடுக்கவில்லையா என்று கேட்டார். அந்த வார்த்தை என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அடுத்த நாளில் எனக்கு சிஎஸ்கே ஒப்பந்தம் கிடைத்தது. ஆனால், சிஎஸ்கே அணியில் ஏற்கனவே முத்தையா முரளிதரன் இருந்தார். அப்படியிருக்கும் போது எனக்கு எப்படி பிளேயிங் 11ல் இடம் கிடைக்கும் என்று எண்ணினேன்.

அப்போது பிசிசிஐ பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசன், தோனியிடம் சென்று அஸ்வின் என்று பையன் இருக்கிறான். ஆஃப் ஸ்பின்னர். அவனை நீ ஒரு முறை பார்க்க வேண்டும் என்றார். அதன் பிறகு கிறிஸ் கெயிலுக்கு எதிராக பந்து வீச முதல் ஓவரை தோனி எனக்கு கொடுத்தார். தோனி கொடுத்த அந்த ஒரு வாய்ப்புக்காக நான் எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன்.

அடுத்து 2013ல் என்னை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றார்கள். ஆனால், தோனி தான் கடந்த சீசனில் அஸ்வின் தான் தொடர் நாயகன் விருது வென்றிருக்கிறார். அவர் அணியில் இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு ஹர்பஜன் சிங்குடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் பற்றி எல்லா வித்தைகளையும் தெரிந்தவர் அனில் கும்ப்ளே. யாருடைய மனதையும் புண்படுத்தாதவர். அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அவருக்கு பிறகு தற்போது ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் அதிக நேரங்கள் செலவிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: ரூ.14 கோடி போச்சா..? CSKவின் காஸ்ட்லி பிளேயருக்கு காயம்.. கலக்கத்தில் ரசிகர்கள்
பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி