டி20 உலக கோப்பை: மீண்டும் அணியின் கேப்டனாகும் முன்னாள் கேப்டன்? கிரிக்கெட் வாரியமே அழைப்பு! ரசிகர்கள் உற்சாகம்

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 2:51 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸை மீண்டும் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. 
 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ், கிரிக்கெட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜா. அதிரடியான பேட்டிங், அபாரமான ஃபீல்டிங், அசத்தலான விக்கெட் கீப்பிங் என அனைத்துவிதத்திலும் அணிக்கு சிறப்பான பங்களிக்கக்கூடியவர்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடும் வல்லமை பெற்றவர் டிவில்லியர்ஸ். அதனால் ரசிகர்களால் மிஸ்டர் 360 என அன்புடன் அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்க வீரரான டிவில்லியர்ஸ், எல்லைகளை கடந்து சர்வதேச அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ள டிவில்லியர்ஸ், நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தபோதிலும், திடீரென, 2018ம் ஆண்டு மே மாதம் திடீரென ஓய்வு அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வால், அவரது இடத்தை நிரப்பமுடியாமல் திணறிவரும் தென்னாப்பிரிக்க அணி, 2019 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது மட்டுமல்லாமல், அதன்பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்தது. 

இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை கருத்தில்கொண்டு, டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள், மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளரானது முதல் வந்துகொண்டுள்ளன. 

இதற்கிடையே, தொடர் தோல்விகளின் விளைவாக டுப்ளெசிஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு குயிண்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிவில்லியர்ஸ் அளித்துள்ள பேட்டியில், தன்னை மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்குமாறு கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், என்னை மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க சொல்கிறது. ஆனால் நான் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் ஆட வேண்டுமென்றால் நான் டாப் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். 

அணியில் எனக்கான இடத்திற்கு நான் தகுதியானவன் என்பதை நான் உணர வேண்டும். அந்தளவிற்கு ஃபார்மில் இருந்தால்தான் நான் ஆடமுடியும். ஏனெனில் நான் இரண்டு ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியில் ஆடவில்லை. எனவே நான் டாப் ஃபார்மில் இருந்தால் தான் எனக்கு தன்னம்பிக்கை வரும். என் மீதான நம்பிக்கை மற்றவர்களுக்கும் வர வேண்டும். அப்படியென்றால் தான் நான் மீண்டும் அணியில் ஆடமுடியும் என்றார்.
 

click me!