முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By karthikeyan VFirst Published Sep 3, 2019, 10:26 AM IST
Highlights

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமிக்கு மேற்குவங்க மாநிலத்தின் அலிபூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 
 

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமிக்கு மேற்குவங்க மாநிலத்தின் அலிபூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழும் முகமது ஷமிக்கு அவரது மனைவியின் மூலம் சிக்கல் வந்துகொண்டேயிருக்கிறது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஹசின் ஜஹான் என்ற பெண்ணை ஷமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஷமிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அதைக்கேட்டதற்கு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சொன்ன ஷமியின் மனைவி ஹசன், இதுதொடர்பாக கொல்கத்தா காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். 

இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் ஷமி மறுத்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அலிபூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த பிரச்னையால் இந்திய அணியில் ஆடாமல் ஷமிக்கு சிறிய இடைவெளி ஏற்பட்டது. அதன்பின்னர் இதுதொடர்பாக ஷமியிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் இந்திய அணியில் மீண்டும் ஆட அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து ஷமியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், நியூசிலாந்து சுற்றுப்பயணம், ஐபிஎல், உலக கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் ஆடினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வென்றநிலையில், அந்த அணியில் ஷமி ஆடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையும் எட்டினார். 

இந்நிலையில், அலிபூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, ஷமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் ஷமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஷமிக்கு ஜாமீன் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதால் பிரச்னையில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் நேற்று முடிந்த நிலையில், இந்திய அணி நாடு திரும்பவுள்ளது. இந்திய அணியுடன் ஷமி நாடு திரும்புவார்.
 

click me!