உலக கோப்பை அணி குறித்த அடுத்த அதிரடி.. ரோஹித் சொன்னதையே தான் அவரும் சொல்றாரு

By karthikeyan VFirst Published Apr 10, 2019, 12:47 PM IST
Highlights

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

உலக கோப்பை தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி ஜூன் 5ம் தேதி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் என ஒருசில இடங்கள் மட்டும் உறுதி செய்யப்பட வேண்டும். 

இந்த இடங்களையும் இந்நேரம் தேர்வுக்குழு உறுதி செய்திருக்கும். வரும் 15ம் தேதி(திங்கட்கிழமை) உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்நேரம் அணி உறுதி செய்யப்பட்டிருக்கும். 

நான்காம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், விஜய் சங்கர், ராயுடு, மனீஷ் பாண்டே, ரெய்னா என கடந்த 2 ஆண்டுகளில் பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆட்டத்திறன் மற்றும் அவர்கள் ஆடியதன் அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

எனினும் ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் இருந்தனர். சில இடங்கள் கடைசி வாய்ப்பாக ஐபிஎல்லில் சில வீரர்கள் ஆடுவதன் அடிப்படையில் உறுதி செய்யப்படும் என்ற பேச்சு இருந்தது. ஆனால் ஐபிஎல்லின் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய முடியாது என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைய ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளோம். வீரர்கள் போதுமான ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளதால் வீரர்களின் ஆட்டத்திறனை அந்த போட்டிகளில் ஆடியதை வைத்து தேர்வுக்குழு மதிப்பீடு செய்திருக்கும். சில வீரர்கள் ஐபிஎல்லில் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கலாமே தவிர, ஐபிஎல்லில் ஆடுவதன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய முடியாது. ஒருநாள் போட்டிக்கு டி20 போட்டியில் ஆடுவதன் அடிப்படையில் தேர்வு செய்ய முடியாது. அதுவும் ஐபிஎல்லில் ஆடுவதை வைத்து சுத்தமாக முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில் வீரர்கள் ஆடியதன் அடிப்படையில்தான் உலக கோப்பை அணி தேர்வு இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

தற்போது அதையே தான் தேர்வுக்குழு தலைவரும் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் வீரர்கள் ஆடுவதன் அடிப்படையில் உலக கோப்பை அணி தேர்வு இருக்காது. உலக கோப்பையில் ஆடும் வீரர்கள் குறித்து தெளிவாக இருக்கிறோம். எனவே ஐபிஎல்லின் அடிப்படையில் தேர்வு அமையாது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

click me!