பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிரட்டிய பிராத்வெயிட்.. சூப்பர் ஓவரில் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Sep 18, 2019, 12:42 PM IST
Highlights

பிராத்வெயிட்டின் அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங் ஆகியவற்றால் சூப்பர் ஓவரில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி செயிண்ட் கிட்ஸ்&நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் செயிண்ட் கிட்ஸ்&நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பொல்லார்டு தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, லெண்டல் சிம்மன்ஸின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 216 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸ், 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 90 ரன்களை குவித்தார். அவரைத்தவிர மற்ற யாருமே அரைசதம் அடிக்கவில்லை. எனினும் கோலின் முன்ரோ, பொல்லார்டு, டேரன் பிராவோ, ஜேம்ஸ் நீஷம் ஆகியோரின் பங்களிப்பால் நைட் ரைடர்ஸ் அணி 216 ரன்களை குவித்தது. 

217 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய பாட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட்டும் தொடக்க வீரர் லெவிஸும் இணைந்து அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் அபாரமாக ஆடிய இவர்கள் இருவரில் ஒருவர் கடைசி வரை ஆடவில்லை. லெவிஸ் 21 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

பிராத்வெயிட் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்ய, வெற்றிக்காக கடுமையாக போராடிய பாட்ரியாட்ஸ் அணியால் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை. அதேநேரத்தில் தோற்றும் விடவில்லை. பாட்ரியாட்ஸ் அணியும் சரியாக 216 ரன்களை அடிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது. 

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இரண்டாவது பேட்டிங் ஆடிய அணிதான் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடும் என்பதால் பாட்ரியாட்ஸ் அணி ஆடியது. பிராத்வெயிட்டும் லெவிஸும் இறங்கினர். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அலி கான் பந்துவீசினார். முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய பிராத்வெயிட், இரண்டாவது பந்தில் சிங்கிள் தட்டினார். மூன்றாவது பந்திலும் சிங்கிள் எடுக்கப்பட்டதால், மீண்டும் பேட்டிங் முனைக்கு வந்த பிராத்வெயிட், நான்காவது பந்தில் ரன் அடிக்கவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் சிக்சரும் பவுண்டரியும் விளாசி 10 ரன்களை சேர்க்க, சூப்பர் ஓவரில் பாட்ரியாட்ஸ் அணி 18 ரன்களை குவித்தது. 

சூப்பர் ஓவரில் 19 ரன்கள் என்ற கடின இலக்குடன் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சார்பில் டேரன் பிராவோவும் சிம்மன்ஸும் இறங்கினர். பிராத்வெயிட் தான் சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் கொடுக்காமல் வீசிய பிராத்வெயிட், இரண்டாவது பந்தில் பிராவோவை வீழ்த்தினார். மூன்றாவது பந்தில் சிம்மன்ஸ் ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு, அந்த பந்தில் ரன் அடிக்கவில்லை. ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆறாவது பந்தும் டாட் பால். மொத்தமாகவே சூப்பர் ஓவரில் ட்ரின்பாகோ அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்ததால், சூப்பர் ஓவரில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. 

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்திய பிராத்வெயிட் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

click me!