இந்தியாவின் ஹாட்ரிக் நாயகர்கள் பட்டியலில் இணைந்த பும்ரா

By karthikeyan VFirst Published Sep 1, 2019, 2:58 PM IST
Highlights

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. இந்த 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் பும்ரா வீழ்த்தியவை. இதில் ஹாட்ரிக்கும் அடங்கும். இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசிய பும்ரா, டேரன் பிராவோ, ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஹனுமா விஹாரியின் அபார சதம், விராட் கோலி - மயன்க் அகர்வாலின் அரைசதம் மற்றும் கடைசி நேர இஷாந்த் சர்மாவின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது வேகத்தில் சரித்தார் பும்ரா. பும்ராவின் நேர்த்தியான மற்றும் துல்லியமான ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

இந்த 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் பும்ரா வீழ்த்தியவை. இதில் ஹாட்ரிக்கும் அடங்கும். இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசிய பும்ரா, டேரன் பிராவோ, ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் பும்ரா ஆவார். ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் ஹர்பஜன் சிங். அவருக்கு அடுத்து ஹாட்ரிக் வீழ்த்தியது இர்ஃபான் பதான். 2001ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் வந்து ஆடியபோது, கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாண்டிங், கில்கிறிஸ்ட் மற்றும் ஷேன் வார்னே ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் போட்டார் ஹர்பஜன் சிங். அந்த போட்டியில் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அதன்பின்னர் 2006ல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தானின் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய மூன்று சிறந்த பேட்ஸ்மேன்களை முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி மிரட்டினார் இர்ஃபான் பதான். 

அதற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து பும்ரா தற்போது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதானுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் பும்ரா தான். 
 

click me!