BBL நாக்அவுட் மேட்ச்சில் சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அபாரவெற்றி! சேலஞ்சரில் ஸ்கார்ச்சர்ஸுடன் மோதல்

By karthikeyan VFirst Published Jan 31, 2021, 5:35 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கின் நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் ரவுண்டிற்கு முன்னேறியுள்ளது.
 

பிக்பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது சிட்னி சிக்ஸர்ஸ் அணி. இன்று நடந்த நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டரும் பிரிஸ்பேன் ஹீட்டும் மோதின.

கான்பெராவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணி, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது.  தண்டர் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 30 பந்தில் வெறும் 28 ரன்கள் மட்டுமே அடித்து, மற்ற வீரர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து விட்டுச்சென்றார்.

அதன்பின்னர் கேப்டன் ஃபெர்குசன் 25 ரன்களும், பில்லிங்ஸ் 34 ரன்களும் அடித்தனர். கடைசி நேரத்தில் பென் கட்டிங் அதிரடியாக ஆடி 18 பந்தில் 34 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் சிட்னி தண்டர் அணி 158 ரன்கள் அடித்தது.

159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சொதப்பினர். ஜோ டென்லி ஐந்து பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, கேப்டன் கிறிஸ் லின் 8 பந்தில் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மார்னஸ் லபுஷேன் 30 பந்தில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹீஸ்லெட் மற்றும் பியர்சன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி பிரிஸ்பேன் ஹீட் அணியை வெற்றி பெற செய்தனர்.

அதிரடியாக ஆடிய ஹீஸ்லெட் அரைசதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார் பியர்சன். அரைசதம் அடித்த ஹீஸ்லெட் 49 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். பியர்சன் 24 பந்தில் 43 ரன்கள் அடித்தார். ஹீஸ்லெட் மற்றும் பியர்சனின் சிறப்பான பேட்டிங்கால் கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, சேலஞ்சர் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

 ஃபைனலுக்கு தகுதிபெறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டி வரும் பிப்ரவரி 4ம் தேதி நடக்கிறது. அந்த சேலஞ்சர் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை எதிர்கொள்கிறது பிரிஸ்பேன் ஹீட் அணி. அந்த போட்டியில் வெல்லும் அணி, ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்ளும்.
 

click me!