
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் தோற்றிருந்தாலும், அதன்பின்னர் நடந்த 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
கேன் வில்லியம்சனின் மிகச்சிறந்த கேப்டன்சியில் அபாரமான பவுலிங், அருமையான பேட்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்துவருகிறது.
கடந்த பல சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியில் அங்கம் வகித்த வார்னர், ரஷீத் கான் ஆகிய இருபெரும் மேட்ச் வின்னர்களை விடுவித்தபோதிலும், அவர்களை மிஸ் செய்யாத அளவிற்கு அபாரமாக ஆடிவருகிறது சன்ரைசர்ஸ் அணி.
இந்நிலையில், ரஷீத் கான் இல்லாதது குறித்து சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரயன் லாரா பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய பிரயன் லாரா, ரஷீத் கானை மட்டும் கவனமாக ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் எதிரணிகள் ஆடுவதால் அவரால் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அவரது எகானமி ஓவருக்கு 5.5-6 ரன்கள் தான். ஆனால் வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசுகிறார். அவர் எங்கள் அணியின் மிகப்பெரிய சொத்து. அவருக்கு மாற்றாக களமிறங்கிய சுஜித்தும் நல்ல வீரர் என்றார் பிரயன் லாரா.
சன்ரைசர்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளில் பவுலிங்கில் வலுவான அணியாக திகழ முக்கிய காரணமாக இருந்தவர் ரஷீத் கான். அந்த அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுத்ததுடன், அந்த அணியின் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த ரஷீத் கான், சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் 76 போட்டிகளில் ஆடி 93 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.