#ENGvsIND சூர்யகுமார் யாதவை ஆடவைப்பது பெரிய ரிஸ்க்..! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 29, 2021, 10:28 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவை ஆடவைப்பது இந்திய அணிக்கு ரிஸ்க் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. எனவே தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

இந்திய அணியில் 3 , 4 மற்றும் 5ம் பேட்டிங் ஆர்டரில் ஆடும் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் சரியாக ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ள நிலையில், ரஹானேவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ள நிலையில், அதுகுறித்து பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், சூர்யகுமார் யாதவை அணியில் சேர்ப்பது குறித்து கண்டிப்பாக பேச்சு நடக்கும். இந்திய அணி மாற்றம் செய்ய நினைத்தால் மிடில் ஆர்டரில் கண்டிப்பாக சூர்யகுமார் யாதவ் சிறந்த ஆப்சனாக இருப்பார். ஆனால் இந்திய அணி மாற்றம் செய்வதாக இருந்தால் மிகக்கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ரஹானே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ரஹானே லார்ட்ஸ் டெஸ்ட்டில் நன்றாக ஆடியிருக்கிறார். கடந்த காலங்களில் இந்தியாவிற்காக சிறப்பாக ஆடியிருக்கிறார்.

இந்திய அணி அடுத்த டெஸ்ட்டிலும் கடந்த டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அதே பேட்டிங் ஆர்டருடன் தான் களமிறங்கும் என நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவை 5ம் வரிசையில் இறக்கினால், 6ம் வரிசையில் இறங்குவதோ ரிஷப் பண்ட். இருவருமே ஆக்ரோஷமாக ஆடக்கூடிய வீரர்கள். ஸ்விங் கண்டிஷனில் 2 அதிரடி வீரர்கள் ஆடுவது ரிஸ்க் என பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!