இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் அடித்த நிலையில், கடைசியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி நிதானமாக விளையாடியது. முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர் என்று பவுலர்கள் பந்து வீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இதில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தையும் பூர்த்தி செய்துவிட்டார்.
கடைசியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச வந்தார். அவர், வீசிய 61.1ஆவது பந்திலேயே ரோகித் சர்மா கிளீன் போல்டாகி வெளியேறினார். இதே போன்று சதம் விளாசிய சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் கிளீன் போல்டானார்.