இந்திய அணியின் டெஸ்ட் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி ஊக்கத் தொகையும் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜ்கோட்டில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசியாக நேற்று முடிந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி போனஸ் தொகையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், இதற்கு இஷான் கிஷான் தான் காரணமாக சொல்லப்படுகிறது. தனக்கு அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டு விலகினார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் இஷான் கிஷான் இடம் பெற்று விளையாடவில்லை.
வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக ஜிம்மில் ஹெவியான ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று விளையாடிய நிலையில், இனி வரும் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக போனஸ் அளிக்க முன்வந்துள்ளது.
இனி வரும் டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்று விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் போன்ஸ் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தற்போது பிசிசிஐ மூலமாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என்று சமபளம் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் டெஸ்ட் தொடர்களில் சம்பளம் மட்டுமின்றி வருட கடைசியில் போனஸ் தொகையும் வீரர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.