டி20 கிரிக்கெட்டில் பிசிசிஐ கொண்டுவரும் புதிய விதி..! கேப்டன்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.. அணிகள் உற்சாகம்

By karthikeyan VFirst Published Sep 17, 2022, 5:07 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில்  தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்துகிறது.
 

டி20 கிரிக்கெட் தான் இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கிரிக்கெட் ஃபார்மட். அதற்கு காரணம் மூன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும் டி20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

அதனால் டி20 கிரிக்கெட்டை மேலும் பரபரப்பாகவும் விறுவிறுப்பானதாகவும் மாற்ற பல புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பிசிசிஐ புதிய விதியை அறிமுகப்படுத்துகிறது.

இதையும் படிங்க - இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய ஞானம்! T20WC அணியில் புறக்கணிப்பு குறித்து பெரிய மனுஷத்தனமா பேசிய சஞ்சு சாம்சன்

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற புதிய விதியை அமல்படுத்துகிறது. இந்த விதி என்னவென்பது குறித்து விரிவாக பார்ப்போம். பொதுவாக டாஸ் போடும்போது கேப்டன்கள் தங்கள் அணிகளின் ஆடும் லெவனை அறிவிப்பார்கள். அவர்களுடன் 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அறிவிப்பார்கள். ஆடும் லெவன் வீரர்களில் யாராவது காயத்தால் ஆடமுடியாமல் போனால் அவர்கள் ஆடலாம். ஆனால் மாற்று வீரர்கள் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது. ஃபீல்டிங் மட்டுமே செய்யலாம்.

இந்நிலையில், இப்போது பிசிசிஐ அறிமுகப்படுத்தும் புதிய விதியின் மூலம், ஆடும் லெவனுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்று ஒரு வீரரை எடுத்துக்கொள்ளலாம். ஆட்டத்தில் ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக அந்த வீரரை பயன்படுத்த நினைத்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

போட்டி நடக்கும் ஆடுகளத்தின் கண்டிஷனை சரியாக கணிக்காமல், ஆடும் லெவனை தேர்வு செய்திருந்தால், பின்னர் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது கேப்டன் அதை உணர்ந்தால், “தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்” என்று எடுக்கப்பட்ட வீரரை ஆட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு கண்டிஷனை பற்றி சரியாக தெரியவில்லை என்றால், இரட்டை மனநிலையில் இருக்கும்பட்சத்தில், இருவேறு சூழலுக்கு ஏற்ற வீரர்களையும் ஆடவைக்க முடியும். இருவேறு சூழல்களில் ஒரு சூழலுக்கு ஏற்ற வீரரை ஆடும் லெவனிலும், தவிர்க்க முடியாமல் வேறு வழியின்றி தவிர்க்கவேண்டிய வீரரை தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக எடுக்கும்பட்சத்தில், ஆட்டத்தின் இடையே தேவைப்பட்டால் அவரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சில நேரங்களில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க 2 வீரர்களுக்கு இடையே கடும்போட்டி நிலவும். இனிமேல் அப்படியான சூழலில் அவர்களில் ஒருவரை ஆடும் லெவனிலும், மற்றொருவரை தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராகவும் எடுக்கலாம். 

இது கேப்டன்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். கூடுதலாக ஒரு வீரரை ஆடவைக்கும் ஆப்சன் கேப்டன்களுக்கு கூடுதல் சௌகரியத்தை கொடுக்கும். இந்த வசதியை சரியாக பயன்படுத்தும்  அணிக்கு வெற்றி எளிதாக வசப்படும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் அவர் ஆடாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு..! ரோஹித்&கோ-வை அச்சுறுத்தும் ஜெயவர்தனே

தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை இன்னிங்ஸின் 14வது ஓவருக்கு முன் அறிமுகப்படுத்த வேண்டும். களநடுவர் மற்றும் ஃபோர்த் அம்பயரிடம் கூறிவிட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை அந்த குறிப்பிட்ட ஓவர் முடிந்தபின் இறக்கிவிடலாம்.

இந்த விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்துவதால் அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லிலும் அமல்படுத்தப்படும். விரைவில் ஐசிசியும் இந்த விதியை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 

click me!