கொரோனா 2ம் அலை: 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நன்கொடை வழங்கிய பிசிசிஐ

By karthikeyan VFirst Published May 24, 2021, 5:35 PM IST
Highlights

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் விதமாக 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ நன்கொடையாக வழங்கியுள்ளது.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. இந்தியாவில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதன் விளைவாக தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். ஆனாலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால், படுக்கை தேவை, ஆக்ஸிஜன் தேவை, ஆக்ஸிஜன் படுக்கை தேவை ஆகியவை அதிகமாக உள்ளது. ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து ஈடுகட்டிவருகிறது.

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள, பல தரப்பினரும் தங்களால் முடிந்த நிதி உதவியோ, பொருள் உதவியோ செய்துவருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கி கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்துவருகின்றனர்.

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள், ஐபிஎல் அணிகளின் சார்பிலும் நிதியுதவி செய்யப்பட்டது. ஆர்சிபி அணியின் உரிமையாளரான Diageo இந்தியா நிறுவன உரிமையாளர் அனந்த் க்ரிபாலு ரூ.45 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். 

இந்நிலையில், பிசிசிஐ சார்பில் 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் விதமாக 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ வழங்கியுள்ளது.
 

click me!