டெஸ்ட் அணிக்கு திரும்பிய சீனியர் வீரர்.. ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jul 21, 2019, 3:41 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் 3 தொடர்களுக்குமான இந்திய அணியை அறிவித்தார். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மாவுக்கும் அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்காத ரோஹித்துக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் புஜாரா, ரஹானே, விராட் கோலி, ஹனுமா விஹாரி ஆகியோர் மிடில் ஆர்டரில் இறங்குவார்கள் என்பதால், ரோஹித் சர்மாவுக்கு மிடில் ஆர்டரில் இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே ரோஹித் மிடில் ஆர்டரில் இறக்கப்படுவாரா அல்லது தொடக்க வீரராக இறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சுற்றுப்பயணங்களில் டெஸ்ட் தொடர்களில் ஓரளவிற்கு சிறப்பாகவே ஆடிய ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். காயத்தால் கடந்த ஓராண்டாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத ரித்திமான் சஹா மாற்று விக்கெட் கீப்பராக அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர். அஷ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), மயன்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ். 
 

click me!