தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. தூக்கியெறியப்பட்ட தொடக்க வீரர்.. இளம் வீரர் அறிமுகம்

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 4:52 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 தொடருக்கான இரு அணிகளும் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இறங்கிவந்த ராகுல் தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அனைத்திலும் சொதப்பினார். அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் அனைத்து வாய்ப்புகளையும் வீணடித்தார். அவரது மோசமான பேட்டிங்கால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமையாமல் இருந்துவந்தது. 

ரோஹித்தையே டெஸ்ட் அணியிலும் தொடக்க வீரராக இறக்கலாம் என்ற குரல் வலுத்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ராகுல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ரோஹித் தொடக்க வீரராக இறங்கவுள்ளார். ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் அபாரமாக ஆடிவந்த கில்லுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கில் டெஸ்ட் அணியில் முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ளார். 

உமேஷ் யாதவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மற்ற அனைவருமே வெஸ்ட் இண்டீஸ் தொடரிம் இடம்பெற்றிருந்த அதே வீரர்கள் தான். வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை. ஹர்திக் பாண்டியா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்.

click me!