உங்க யோக்கியதை தான் ஊருக்கே தெரியுமே.. 2005ல் பண்ணதை மறந்துட்டீங்களா..? வாயை கொடுத்து வாங்கிக்கட்டும் இங்கிலாந்து முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 3:17 PM IST
Highlights

ஸ்மித்தை திறமையால் வீழ்த்த முடியாமல், அவரது பழைய தவறை சுட்டிக்காட்டி மட்டம்தட்ட முயன்ற இங்கிலாந்து முன்னாள் வீரருக்கு ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவருகிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித், முன்பை விட வேற லெவலில் பேட்டிங் ஆடி அசத்திவருகிறார். 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் ஆட்டமிழந்து 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அந்த இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிபட்டதால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. அந்த காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட்டிலும் ஆடவில்லை. 

காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியுடன் நான்காவது டெஸ்ட்டில் ஆடிய ஸ்மித், முதல் இன்னிங்ஸில் தனது அருமையான பேட்டிங்கால் இரட்டை சதமடித்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்தார். விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸ் ஆடவைக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடியதால் சதத்தை தவறவிட்டு 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இல்லையெனில் அதிலும் சதமடித்திருப்பார். 

ஸ்மித்தின் அசத்தலான பேட்டிங் மற்றும் கம்மின்ஸ், ஹேசில்வுட்டின் அபாரமான பவுலிங்கால் ஆஸ்திரேலிய அணி நான்காவது டெஸ்ட்டில் வென்று 2-1 என ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்மித், இந்த போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

ஆஷஸ் தொடரில் ஸ்மித் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறார். இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக திகழ்வதே ஸ்மித்தின் இன்னிங்ஸ் தான். தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணிக்கு அவர் சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ஸ்மித்தை மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஹார்மிசன். 

ஸ்மித் குறித்து பேசிய ஹார்மிசன், ஸ்மித்தை மன்னிக்க முடியாது என்றே நினைக்கிறேன். அவர் என்றைக்கு ஏமாற்றுக்காரர் என்ற பெயரை பெற்றாரோ, அவர் என்ன செய்தாலும் ஏமாற்றுக்காரர் தான். அது அவரது சி.வியில் இணைந்துவிடும். ஸ்மித் என்ன சாதனைகள் செய்தாலும், அவர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஏமாற்றக்காரராகத்தான் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார் என்று ஹார்மிசன் தெரிவித்திருந்தார். 

ஸ்மித்தின் திறமைக்கு இங்கிலாந்து அணியால் ஈடுகொடுக்க முடியாத சூழலில், அவரை திறமையால் வீழ்த்துவதை விடுத்து, தண்டனை அனுபவித்த பழைய தவறை சுட்டிக்காட்டி மட்டம்தட்ட நினைப்பது சரியான செயல் அல்ல. அதனால் ஹார்மிசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்களே கருத்து தெரிவித்தனர். 

கடைசி ஆஷஸ் போட்டி இன்று ஓவலில் தொடங்கவுள்ள நிலையில், ஹார்மிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் பீட்டர் சிடில். இதுகுறித்து பேசியுள்ள பீட்டர் சிடில், ஹார்மிசன் சொன்னதைவிட பெரிய காமெடி எதுவும் இல்லை. 2005 ஆஷஸ் தொடரில் ஹார்மிசன் ஆடியபோது, அவரது 2 சக வீரர்கள் சுகர்(சர்க்கரை)-கோட்டிங் செய்து பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர். அப்படியிருக்க, ஹார்மிசன்லாம் ஸ்மித் பற்றி பேசலாமா..? ஸ்மித் இதுபோன்ற விமர்சனங்களுக்கெல்லாம் தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துவருகிறார் என்று பீட்டர் சிடில் தெரிவித்துள்ளார். 
 

click me!