New Zealand vs Bangladesh: நியூசி., மண்ணில் பட்டைய கிளப்பும் பங்களாதேஷ்.. அருமையான வெற்றி வாய்ப்பு

By karthikeyan VFirst Published Jan 4, 2022, 2:55 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 328 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணியின் 3ம் வரிசை வீரரான டெவான் கான்வே சிறப்பாக பேட்டிங் ஆடி 122 ரன்களை குவித்தார். ஹென்ரி நிகோல்ஸ் பொறுப்புடன் அபாரமாக பேட்டிங் ஆடி 75 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் வில் யங் 52 ரன்கள் அடித்தார். இவர்கள் மூவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 328 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான மஹ்மதுல் ஹசன் ராயுடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ சிறப்பாக பேட்டிங் ஆடினார். இருவருமே அரைசதம் அடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 104 ரன்களை குவித்தனர்.

நஜ்முல் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மஹ்முதுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை மஹ்முதுலும் கேப்டன் மோமினுல் ஹக்கும் தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய மஹ்முதுல் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் பொறுப்புடன் விளையாடினார். ஹக்கும் தாஸும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 5வது விக்கெட்டுக்கு 158 ரன்களை குவித்தனர். சதத்தை நெருங்கிய கேப்டன் மோமினுல் ஹக் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட, லிட்டன் தாஸும் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 3ம் நாள் ஆட்டமுடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்களை குவித்திருந்தது. யாசிர் அலி 11 ரன்களுடனும் மெஹிடி ஹசன் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் கடைசி 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்த வங்கதேச அணி 458 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 130 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் வில் யங் மட்டும் நன்றாக ஆடி 69 ரன்கள் அடித்தார். டாம் லேதம், டெவான் கான்வே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹென்ரி நிகோல்ஸ் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரும் டக் அவுட்டாகினர். ரோஸ் டெய்லர் 37 ரன்களுடனும் ரவீந்திரா  6 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் 4ம் நாள் ஆட்டம் முடிந்தது.

4ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்துள்ளது. நியூசிலாந்து அணி வெறும் 17 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருப்பதால், கடைசி நாள் ஆட்டத்தில் விரைவில் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வங்கதேச அணி எளிய இலக்கை விரட்டும். எனவே வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

click me!