நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. கடைசி இடத்திற்கான போட்டியில் வங்கதேசம் மற்றும் நேபாள் அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற நேபாள் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேச அணியானது, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் நேபாள் அணியில் சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் பால், லமிச்சனே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய நேபாள் அணியானது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குஷால் மல்லா மற்றும் திபேந்திர சிங் ஐரீ மட்டுமே அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.
இறுதியாக நேபாள் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வங்கதேச அணியானது கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8ல் குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.