#ENGvsPAK ரோஷத்துடன் அபார சதமடித்த பாக்., கேப்டன் பாபர் அசாம்..! இங்கிலாந்து அணிக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jul 13, 2021, 10:11 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் அபார சதத்தால் 331 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 332 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி, முதல் 2 ஒருநாள் போட்டிகளில் அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது. அந்த 2 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. 

அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்ததையடுத்து, பாகிஸ்தான் அணியை முன்னாள் ஜாம்பவான்களான இன்சமாம் உல் ஹக், ஷோயப் அக்தர் ஆகியோர் மிகக்கடுமையாக விமர்சித்தனர்.

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற்று, ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற முனைப்பில் கடைசி போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தாலும், மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 

3ம் வரிசையில் இறங்கி மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய கேப்டன் பாபர் அசாம், இமாம் உல் ஹக் செய்த தவறை செய்யாமல், செட்டில் ஆனபின்னர் அபாரமாக ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் உடனடியாக ஆட்டமிழக்காமல் பெரிய இன்னிங்ஸ் ஆடி 158 ரன்களை குவித்தார். பாபர் அசாம் 139 பந்தில் 158 ரன்களை குவிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ரிஸ்வான், 74 ரன்களை குவிக்க, அதன்பின்னர் மற்ற வீரர்கள் அனைவரும் சீட்டுக்கட்டாய் சரிந்தனர். 

ஆனாலும் பாபர் அசாமின் அபார சதம் மற்றும் ரிஸ்வானின் பொறுப்பான அரைசதத்தால் 50 ஓவரில் 331 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 332 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. அந்த இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது.
 

click me!