
தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக அயர்லாந்துக்கு சென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்தது. 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி அயர்லாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆண்ட்ரூ பால்பிர்னி அபாரமாக ஆடி சதமடித்தார். மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டர்லிங் 27 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கிய மெக்பிரைன் 30 ரன்களும் அடித்தனர்.
அபாரமாக ஆடி சதமடித்த கேப்டன் பால்பிர்னி 102 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தங்களது தோள்களில் சுமந்து, ஹாரி டெக்டார் மற்றும் டாக்ரெல் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அயர்லாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் அடித்த ஹாரி, 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டாக்ரெல் 23 பந்தில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து 50 ஓவரில் 290 ரன்களை குவித்த அயர்லாந்து அணி, 291 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.