நீ இன்னும் எத்தனை வருஷத்துக்கு வேணா ஆடிட்டுப்போ.. ஆனால் அதை மட்டும் பண்ணுப்பா.. முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 23, 2019, 1:28 PM IST
Highlights

தோனியின் ஓய்வு குறித்த விவாதம் வலுத்து, பலரும் பலவிதமாக பேசிவரும் நிலையில், முன்னாள் கேப்டன் அசாருதீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி ஓய்வு குறித்து வாய்திறக்காமல் மௌனம் காத்துவருகிறார். ஆனால் தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் கூட, இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில்வைத்து, அடுத்த விக்கெட் கீப்பரை வளர்த்தெடுக்கும் பணிகளை அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று அணிகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. துணை ராணுவப்படை பயிற்சிக்கு செல்வதால், தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை என்பதை தோனி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பிசிசிஐக்கு அறிவித்துவிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவர் இல்லை.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று விதமான போட்டிகளுக்கும் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகாவிட்டாலும் ரிஷப் பண்ட் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தோனி ஓய்வு பெற்றால் அது அவரது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்பதால் அவர் இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார் என்று கம்பீர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில், தோனியின் நெருங்கிய நண்பரான அருண் பாண்டே, தோனிக்கு இப்போதைக்கு ஓய்வுபெறும் ஐடியா இல்லை என்று தெரிவித்திருந்தார். அணியில் தோனிக்கான வாய்ப்பு குறித்தும் தோனியின் மனநிலை குறித்தும் அவரிடமே நேரடியாக தேர்வுக்குழு பேசிவிட வேண்டும் என்று சேவாக் தெரிவித்திருந்தார். 

ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பராக வளர்ந்து முழு பொறுப்பையும் தனது தோள்களில் சுமக்க தயாராகும் வரை, அணியில் இருக்க வேண்டும் என்று தோனியிடம் பிசிசிஐ பேசியதாகவும், இவ்வாறு பல தகவல்கள் தோனியின் ஓய்வு குறித்து உலாவருகின்றன. 

தோனியின் ஓய்வு குறித்த விவாதம் வலுத்து, பலரும் பலவிதமாக பேசிவரும் நிலையில், முன்னாள் கேப்டன் அசாருதீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முகமது அசாருதீன், ஒரு வீரர் எவ்வளவு காலம் வேண்டுமானால் ஆட நினைக்கலாம். ஆனால் தேர்வாளர்கள், அவருடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டும். இல்லையெனில் பலரும் பல விதமாகத்தான் எழுதுவார்கள். 

என்னை பொறுத்தமட்டில், தோனி ஃபிட்டாக இருக்கிறார் மற்றும் நன்றாக ஆடுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் அணியில் தொடர்ந்து ஆடலாம். அவருக்கு இன்னும் கிரிக்கெட் ஆடும் ஆர்வம் அதிகமாக இருக்குமெனில் அவர் ஆடுவதில் தவறில்லை. அவர் இன்னும் 100% ஆர்வத்தில் இருந்தால், அவர் நல்ல வீரர் தான்; அவர் ஆடலாம்.

அவர் ஆடுவதில் பிரச்னையில்லை. ஆனால் ஆக்ரோஷமாக ஆட வேண்டும். ஏனெனில் வயது அதிகமாகிவிட்டால், அது ஆட்டத்தில் சில சமயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தோனி சளைத்துப்போனாற் போல தெரியவில்லை. எனவே தோனி அவரது இயல்பான ஆட்டத்தை ஆடினால் அது அணிக்கு சிறப்பானதாகவும் பலனளிக்கும் வகையிலும் அமையும் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார். 
 

click me!